ஷா ஆலம், ஜன. 3 - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 373 பாரம்பரிய கிராமத்
தலைவர்களுக்கும் மடிக்கணினியும் ஓராண்டு காலத்திற்கு இலவச
இணையச் சேவையும் வழங்கப்படும்.
அவர்களின் சேவையை எளிதாக்கவும் பொது மக்களுடனான தொடர்பை
வலுப்படுத்தவும் இந்த வசதி செய்து தரப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசின் கொள்கை அமலாக்க முகவர்களாக விளங்கும் கிராமத்
தலைவர்கள் இலக்கவியல் துறைக்கு முன்னேறி கிராம நிலையிலான
நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு இந்த முன்னெடுப்பு உதவும் என்று
அவர் சொன்னார்.
இலக்கவியல் மயத் திட்டம் அரசாங்கத் தலைவர்கள் மற்றும்
மாணவர்களுக்கு மட்டும் பயன்பதரக்கூடியது அல்ல. மாறாக, மாநில
அரசின் முகவர்களாக விளங்கும் கிராமத் தலைவர்களுக்கும் இது
அவசியமாகும் என அவர் சொன்னார்.
இலக்கவியல மயத்தை நோக்கி மாற்றங்களை ஏற்படுத்த நாம் தயாராக
இருக்கிறோம். அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை
வழங்குவோம். இதன் வழி அவர்கள் பொதுமக்களுக்கும் மாநில அரசின்
இலக்குகள் குறித்து விளக்கங்களை வழங்க முடியும் என்றார் அவர்.
நேற்று இங்கு பாரம்பரிய கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு குழு
உறுப்பினர்களுக்கு சிறப்புரை வழங்கி அவர்களுக்கு மடிக்கணினிகளை
வழங்கிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கிராமத் தலைவர்கள் தகவல் தொழில்நுட்பம் குறித்து குறிப்பாக தரவு
பயன்பாட்டில் திறன் பெற்றிருக்க வேண்டும். இதன் வழி அவர்கள்
பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் மாநில அரசின் நிர்வாகத்திற்கு
உதவி புரியவும் முடியும் என்றார் அவர்.
கிராமத் தலைவர்கள என்ற முறையில் நாம் நமது அணுகுமுறையை
மாற்றிக் கொள்ள வேண்டும். தரவுகள் தொடர்பான அறிவாற்றலை
வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


