ஷா ஆலம், பிப். 3 - ஷா ஆலமில் உள்ள பிரபல தீம் பார்க் பொழுது போக்கு மையத்தின் கண்ணாடி நீர் சறுக்கிலிருந்து மிதவை ஒன்று இருந்து தவறி விழுந்து ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான முழு அறிக்கை மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நிர்வாகம் விசாரணைக்கு அழைக்கப்படும்.
வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள ஆட்சிக்குழு கூட்டத்தின் போது முழுமையான தகவல் கிடைத்தவுடன் இதன் தொடர்பான சந்திப்பில் ஷா ஆலம் மாநகர் மன்றமும் பங்கேற்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நான் எழுத்துப்பூர்வ அறிக்கையைப் படித்தேன். ஆனால் முழு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாநகர் மன்ற போன்ற அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை உடனடியாக பின்பற்றுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்வோம் என்றார் அவர்.
நேற்று இங்கு கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழுக்களுடனான சந்திப்பு நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி இரவு ஷா ஆலம் 7இல் உள்ள தீம் பார்க்கில் கண்ணாடி நீர்ச்சறுக்கு மிதவை விழுந்து பார்வையாளர் ஒருவர் காயமடைந்ததை ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் உறுதிப்படுத்தியிருந்தார்.
கிராம பாதுகாப்பு குழுக்களுடனான சந்திப்பு நிகழ்வு குறித்து கருத்துரைத்த அமிருடின், அனைத்து கிராமத் தலைவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக தரவு மேலாண்மை பற்றி நன்கு தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இது சமூகக் கண்காணிப்பு செயல்முறையை நலன் சார்ந்த வகையில் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், டாருள் எஹ்சான் மரண சகாய நிதி மற்றும் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் உள்ளிட்ட கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகளை வழங்குவதற்கும் உதவும் என்றார் அவர்.


