டோஹா, பிப். 3 - காஸா போர் நிறுத்தம் தொடர்பான இரண்டாம் கட்டப்
பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கும்படி பாலஸ்தீனம் மற்றும்
இஸ்ரேலை கட்டார் பிரதமர் நேற்று வலியுறுத்தினார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்பதற்கான
எந்தவொரு தெளிவான அறிகுறியும் தென்படவில்லை என்று ஷேக்
முகமது அப்துல்ரஹ்மான் அல் தானி கூறினார்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி (ஹமாஸ்-
இஸ்ரேல்) நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கட்டார் தலைநகர்
டோஹாவில் துருக்கி வெளியுறவு அமைச்சருடன் நடத்திய கூட்டு
செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
முதலாவது போர் நிறுத்தம் அமலுக்கு வந்த 16 நாட்களுக்கு முன்பாக
அதாவது இன்றைக்குள் (திங்கள்கிழமை) இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை
தொடங்கப்பட வேண்டும் என்பது அந்த அமைதி ஒப்பந்தத்தின்
ஷரத்துகளில் ஒன்றாகும் என அவர் சொன்னார்.
காஸாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வகை செய்யும்
சிக்கல் நிறைந்த மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில்
இஸ்ரேலும் ஹமாசும் கடந்த மாதம் கையெழுத்திட்டன. இந்த
உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் 18 இஸ்ரேலிய
பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. அதற்கு பதிலாக இஸ்ரேல் 100க்கும்
மேற்பட்ட பாலஸ்தீனைகளை விடுதலை செய்துள்ளது. காஸாவில்
இன்னும் 70 கைதிகள் பிணை வைக்கப்பட்டுள்ளனர்.
காஸாவில் பிணை வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இஸ்ரேலியர்களை
விடுவிப்பது இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போரை நிரந்தரமாக
முடிவுக்கு கொண்டு வந்து பாலஸ்தீன பிரதேசத்திலிருந்து இஸ்ரேலிய துருப்புகள் முற்றாக மீட்டுக் கொள்ளப்படுவதையும் இந்த பேச்சுவார்த்தை உறுதி செய்யும்.


