ஷா ஆலம், பிப். 3- சுங்கை பெர்ணம் ஆற்றில் லோரி ஒன்று கவிழ்ந்த
சம்பவத்தைத் தொடர்ந்து பெஹ்ராங், கம்போங் செரிகாலா பகுதியில் நீரின்
தரத்தை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்
அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
இந்த விபத்தின் காரணமாக அந்த லோரியிலிருந்து கசிந்த எண்ணெய்
அந்த ஆற்றில் சுமார் 100 மீட்டர் அளவுக்கு படர்ந்து காணப்படுவதாக
லுவாஸ் கூறியது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து மஞ்சள் குறியீடு முடுக்கிவிடப்பட்டு விரிவான
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த எண்ணெய்க் கசிவு சம்பவம் 3.2 கிலோ மீட்டரிலுள்ள சுங்கை
செலிசெக் நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் 31.5 கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெர்ணம் ரிவர் ஹெட்வோர்க் நீர் சுத்திகரிப்பு
நிலையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள
லுவாஸ், நீரின் மேற்பரப்பில் எண்ணெய் தடுப்பு சாதனங்களைப்
பொருத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான லோரியை சம்பவ இடத்திலிருந்து அகற்றும் பணியை
லுவாஸ் கண்காணித்தது. இந்த பணி நேற்று மாலை 5.15 மணியளவில்
முடிவுக்கு வந்தது.


