ஷா ஆலம், பிப். 3 - சிலாங்கூர் மாநில அரசு செயலாளராக டத்தோ டாக்டர்
அகமது ஃபாட்சில் அகமது தாஜூடின் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இந்த
நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மாநில அரசின் நிதி அதிகாரியாகப் பணியாற்றி வந்த அகமது ஃபாட்சில்
பணி ஓய்வு பெறும் டத்தோ ஹாரிஸ் காசிமின் இடத்தை நிரப்புவுள்ளார்.
பணி ஒப்படைப்பு குறிப்பில் கையெழுத்திடும் சடங்கு மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில துணை அரசு
செயலாளர் (நிர்வாகம்) டத்தோ முகமது யாஸிட் சைரி, மாநில
பொருளாதார திட்டமிடல் பிரிவின் இயக்குநர் டத்தோ ஜோஹாரி அனுவார்
மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் மற்றும் இந்தான் எனப்படும்
நிர்வாக மற்றும் புத்தாக்கத்துறையின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை
வகித்த அகமது ஃபாட்சில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி
மாநில அரசு நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


