கோலாலம்பூர், பிப். 1- சரவாக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் சபாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டவில்லை.
சரவாக்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் 62 நிவாரண மையங்களில் 3,648 குடும்பங்களைச் சேர்ந்த 12,486 தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 3,187 குடும்பங்களைச் சேர்ந்த 11,234 பேராக இருந்தது.
சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலக அறிக்கையின்படி பிந்துலு மாவட்டத்தில் 1,649 குடும்பங்களைச் சேர்ந்த 5,885 பேரும், செரியன் மாவட்டத்தில் 2,307 பேரும் (709 குடும்பங்கள்), சமரஹானில் 2,005 பேரும் (670 குடும்பங்கள்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிபு மாவட்டத்தில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 1,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மிரியில் 650 பேரும் (172 குடும்பங்கள்), கூச்சிங்கில் 475 பேரும் (153 குடும்பங்கள்) துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
சபாவில் , நேற்றிரவு 1,797 குடும்பங்களைச் சேர்ந்த 5,195 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 1,820 குடும்பங்களைச் சேர்ந்த 5,216 பேராக உயர்ந்துள்ளது.
ஒன்பது மாவட்டங்களில் 33 வெள்ள நிவாரண மையங்கள் இன்னும் இயங்கி வருவதாக சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.


