ஷா ஆலம், பிப்.1 - இம்மாத தொடக்கத்தில் ராணுவ பாணியில் சடங்குப்பூர்வ உடையணிந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) தலைவர் உட்பட 7 பேர் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் எதிராக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 140, 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் 50(3)வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாற்பது நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் 18 சீருடைகள், பேட்ஜ்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அவர் நேற்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைளெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வு அரசு சாரா அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டு சுங்கை பூலோவில் உள்ள ஹோட்டலில் நடந்ததாக ஹுசைன் விளக்கினார்.
அந்த அமைப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எனினும், சீருடையில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் பேட்ஜ்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புடன் பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர்கள் அணிந்திருந்த அணிகலன்கள் இராணுவ சீருடைகளை ஒத்திருந்தன. அமைப்பில் சேரும் நபர்களுக்கு அவர்கள் கெளரவப் பதவிகள் மற்றும் போலி பதக்கங்களை விற்றதாக நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
இதற்கிடையில், சீருடைப் படையினரின் தோற்றத்தில் உடைகளை அணிவது அல்லது சீருடை அணிந்து இராணுவத்தின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படுத்துவது மற்றும் முறையற்ற நோக்கங்களுக்காக சின்னங்கள், பேட்ஜ்கள் அல்லது அணிகலன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி பொதுமக்கள் மற்றும் அமைப்புகளை ஹுசைன் கேட்டுக் கொண்டார்.


