மாஸ்கோ, பிப்.1- பிரிக்ஸ் அமைப்பு சொந்தமாக புதிய நாணயத்தை வெளியிட்டால் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு எதிராக 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
டாலரிலிருந்து மாறுவதற்கான பிரிக்ஸ் நாடுகளின் எண்ணத்தை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் காலம் முடிவுக்கு வந்து விட்டது. பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டாம் அல்லது டாலருக்கு மாற்றாக வேறு நாணயத் ஆதரிக்க வேண்டாம் என பகைமைப் போக்கை கடைபிடிக்கும் நாடுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தவறினால், அவர்கள் 100 விழுக்காடு வரி விதிப்பை எதிர்நோக்கவும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு விடைகொடுக்கவும் வேண்டி வரும் என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவதற்கு சாத்தியமில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தேசிய நாணயங்களில் ஒரு தீர்வை ஏற்படுத்துவது மற்றும் பொதுவான நாணயத்தை உருவாக்குவதற்கான சாத்தியத்தை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஆராய்ந்து வருவதாக முன்னதாக வந்த தகவல்கள் கூறுகின்றன. எனினும், இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து கடந்த 2016ஆம் ஆண்டு உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க இந்த அமைப்பில் இணைந்தது. கடந்தாண்டில் மேலும் அதிகமான நாடுகள் இதில் உறுப்பியம் பெற்றன.


