NATIONAL

வெ.1,700 குறைந்தபட்ச சம்பள முறை நாளை அமல்- 43.7 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்

31 ஜனவரி 2025, 8:15 AM
வெ.1,700 குறைந்தபட்ச சம்பள முறை நாளை அமல்- 43.7 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்

புத்ராஜெயா, ஜன. 31-  புதிய குறைந்தபட்ச ஊதிய முறை  உத்தரவு நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக மனிதவள அமைச்சு  (கெசுமா) தெரிவித்துள்ளது.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள முதலாளிகளுக்கும்  நிபுணத்துவம் சார்ந்த  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  தொழில் துறை முதலாளிகளுக்கு , தொழிலாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை  ஆனல்  அவர்களுக்கு  இந்த 1,700 வெள்ளி  குறைந்தபட்ச ஊதிய முறை பொருந்தும்.

ஐந்துக்கும் குறைவான பணியாளர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கு  இந்த நடைமுறை வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

அந்தந்த நிறுவனங்களின் சம்பள அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களைச் செய்வதற்கு முதலாளிகளுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த திட்ட அமலாக்கம் வரும் ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சமூக நீதி மற்றும் மக்களின் நல்வாழ்வை வலியுறுத்தும் மடாணி  பொருளாதார  திட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் வாயிலாக  43 லட்சத்து 70 ஆயிரம்  தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று  அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

இந்த ஊதிய உயர்வின் வழி வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தின் தளத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப  மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் அந்த  அறிக்கை கூறியது.

அனைத்து முதலாளிகளும் குறைந்தபட்ச ஊதிய ஆணைக்கு ஏற்ப செயல்பட  வேண்டும்  என்பதோடு  அவர்களின் ஊழியர்கள் மாதத்திற்கு 1,700 வெள்ளிக்கும் குறையாத அடிப்படை சம்பளம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

குறைந்தபட்ச ஊதிய உத்தரவை முதலாளிகள்  கடைப்பிடிக்கத் தவறுவது குற்றமாகும்.  இக்குற்றத்தைப் புரிவோருக்கு 2011 ஆம் ஆண்டு தேசிய ஊதிய ஆலோசனை மன்ற சட்டத்தின் (சட்டம் 732) கீழ்  அபராதம் விதிக்கப்படலாம்.

அனைத்து தொழிலாளர்களுக்கும், குறிப்பாக பட்டதாரிகளுக்கு இந்த  குறைந்தபட்ச ஊதியத்தை ஆரம்ப சம்பள அளவுகோலாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் தொழிலாளர்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை  நினைவூட்டியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.