கோலாலம்பூர், ஜன. 31- பெட்டாலிங் ஜெயா மற்றும் சிப்பாங்கில் ஒரு
பெண் உள்பட நான்கு உள்நாட்டினரைக் கைது செய்ததன் மூலம் செர்டாங்
வட்டாரத்தில் நிகழ்ந்த 11 வழிப்பறிச் சம்பவங்களுக்கு போலீசார் தீர்வு
கண்டுள்ளனர்.
முப்பத்தொன்று முதல் 55 வயது வரையிலான அந்த நால்வர்
சம்பந்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஏற்பட்ட இழப்பு சுமார் 40,000
வெள்ளி என மதிப்பிடப்படுவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.
தாமான் மாவார் பூச்சோங்கில் இம்மாதம் 3ஆம் தேதி நிகழ்ந்த வழிப்பறிச்
சம்பவத்தில் 8,000 வெள்ளி மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிபோனதைத்
தொடர்ந்து கடந்த 16 முதல் 18ஆம் தேதிகளில் போலீசார் மேற்கொண்ட
தொடர் சோதனை நடவடிக்கைகளில் அந்த நால்வரும் கைது
செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
முதலாவது சந்தேகப்பேர்வழி பெட்டாலிங் ஜெயாவில் கைது
செய்யப்பட்டதாகக் கூறிய அவர், உள்நாட்டில் சுற்றுலா மேற்கொண்டப்
பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய
பிரதான சந்தேகப்பேர்வழி மற்றும் பெண் உள்ளிட்ட மூவரை போலீசார்
மடக்கிப் பிடித்தனர் என்றார் அவர்.
கைதானவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கவசத் தொப்பில்
கொள்ளையில் ஈடுபட்ட போது பயன்படுத்திய உடைகள், கைப்பேசி,
கைக்கடிகாரம், சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல்
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
கைதான மூவர் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் 21 முந்தையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதோடு போதைப் பழக்கம் கொண்டவர்களாவும் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.


