கோலாலம்பூர், ஜன. 31- சபா மற்றும் சரவாக்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு இரவு 8.00 மணி நிலவரப்படி 11,886 பேராக அதிகரித்துள்ளது.
சரவாக் மாநிலத்தில் நேற்று மாலை 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,718 பேராக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 2,096 குடும்பங்களைச் சேர்ந்த 7,503 பேராக அதிகரித்துள்ளது.
பிந்துளு மாவட்டத்தில் 471 குடும்பங்களைச் சேர்ந்த 1,922 பேர் ஆறு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ள வேளையில் செரியன் மாவட்டத்தில் 593 குடும்பங்களைச் சேர்ந்த 1,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
செலாங்காவில் 151 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 728 பேர் இன்னும் மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ள வேளையில் தாத்தோவில் செயல்படும் இரண்டு துயர் துடைப்பு மையங்களில் 129 குடும்பங்களைச் சேர்ந்த 426 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கூச்சிங்கில் 151 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிந்துளு, செரியன், கெடாங் மற்றும் செலாங்காவ் ஆகிய இடங்களில் தலா நான்கு புதிய வெள்ளத் துயர் துடைப்பு மையங்கள் செயல் படுத்தப் பட்டுள்ளதாகவும் அந்த செயலகம் தெரிவித்தது.
இதற்கிடையில், சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 1,475 குடும்பங்களைச் சேர்ந்த 4,383 பேராக அதிகரித்துள்ளது.
நேற்று காலை இந்த எண்ணிக்கை 1,365 குடும்பங்களைச் சேர்ந்த 3,929 பேராக மட்டுமே இருந்தது.
இவர்கள் அனைவரும் 10 மாவட்டங்களில் உள்ள 34 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.


