கோலாலம்பூர், ஜன. 30 - இங்குள்ள பழைய கிள்ளான் சாலையில் நேற்றிரவு ஒரு இரவு விடுதி அருகே கவனக்குறைவாக செலுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் மோதியதில் குறைந்தது இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 24 வயது இளைஞரிடமிருந்து இதன் தொடர்பான புகாரை போலீசார் பெற்றதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கு மஷாரிமான் கு மாமுட் கூறினார்.
இரவு விடுதிக்கு அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய டோயோட்டா ஹைலக்ஸ் மற்றும் டோயோட்டா வியோஸ் கார்கள் கூட்டத்தினர் மீது மோதியதில் இரண்டு நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் இதுவரை, பாதிக்கப்பட்டவர்கள் யாரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 என்ற எண்ணிலும், பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறையின் ஹாட்லைன் 03-2297 9222 என்ற எண்ணிலும் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த சம்பவத்தைச் சித்தரிக்கும் 48 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று 'ஹேசல் வான்' என்ற முகநூல் கணக்கில் வைரலானது.
டோயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தால் மோதப்பட்ட ஒருவர் தூக்கியெறியப்படுவதையும் அதே நேரத்தில் மற்ற வாகனமும் சம்பவ இடத்தில் கூடியிருந்த கூட்டத்தினர் மீது மோதுவதையும் அந்த காட்சி சித்தரிக்கிறது.


