கோலாலம்பூர், ஜன. 30- காஜாங்கில் பெற்றோர்களால் துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு வயதுச் சிறுமி நேற்று உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பில் காஜாங் மருத்துவமனை அதிகாரிகள் நேற்று காலை பின்னிரவு 1.11 மணியளவில் காவல் துறையில் புகார் செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
அச்சிறுமியைச் சுயநினைவற்ற நிலையில் அவரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்ற போது அச்சிறுமி உயிரிழந்தார் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அந்த சிறுமியின் உடலில் நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் புதிய மற்றும் பழைய காயங்கள் காணப்பட்டதோடு அவரின் மரணத்திற்கு வயிற்றில் கனமான பொருளால் தாக்கப்பட்டது காரணமாக இருந்தது தெரிய வந்தது என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பில் 30 மற்றும் 40 வயதுடைய அச்சிறுமியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், இந்த மரணச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


