ஷா ஆலம், ஜன. 30- கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் 2025 பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கெர்லிங், அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் கோல குபு பாரு தொகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பொங்கல் வைப்பது, உறியடித்தல், கோலமிடுதல், மலர்த்தொடுத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல கலை, கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பத்தனர்.
பண்பாட்டைக் கட்டிக்காக்கும் அதேவேளையில் மக்களிடையே ‘நாம்‘ என்ற உணர்வை ஏற்படுத்துவதில் இத்தகைய விழாக்கள் பெரும் பங்காற்றுவதாக பாங் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதில் பெரிதும் உதவி புரிந்த ஆலய நிர்வாகத்தினர், உலு சிலாங்கூர் கவுன்சிலர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளிட்டத் தரப்பினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


