ஜோகூர் பாரு, ஜன. 30- மின் அதிர்வு சாதனத்தைப் (டேசர்) பயன்படுத்தி மூன்று கொள்ளையர்கள் மூதாட்டி ஒருவரிடமிருந்து 1,500 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையிட்டுத் தப்பினர்.
இங்குள்ள தாமான் ஸ்கூடாய் பாருவிலுள்ள வீடொன்றில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 60 வயதான அந்த மூதாட்டிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
அன்றைய தினம் இரவு 8.06 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று ஆடவர்கள் அம்மூதாட்டியின் வீட்டு வாயிலில் நின்றதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹிண்டிர் சிங் கூறினார்.
அந்த கொள்ளையர்களில் ஒருவன் அந்த மூதாட்டியை நோக்கி டேசர் கருவியைக் காட்டியதோடு அவரின் கைப்பையையும் பறிக்க முயன்றான். இச்சமயத்தில் இருவரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த மாது கீழே விழுந்தார். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று அவ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஆயுதமேந்தி கும்பலாக கொள்ளையிட்டது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 395/397வது பிரிவு மற்றும் 1958ஆம் ஆண்டு அழிவை ஏற்படுத்தும் வெடி மருந்து, பயங்கர ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சம்பவம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
வீட்டினுள் நுழைய முயன்ற மாது ஒருவரை மின் அதிர்வு சாதனத்தைப் பயன்படுத்தி கும்பல் ஒன்று கொள்ளையிடுவதை சித்தரிக்கும் ஒரு நிமிடம் ஏழு வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று டிக்டாக் செயலியில் பரவலாக பகிரப்பட்டது.


