ஷா ஆலம், ஜன. 30- கணவர் எதிர்நோக்கியுள்ள வழக்கில் தண்டனையைக் குறைப்பதற்கு உதவுவதாகக் கூறிய பெண்ணின் வாக்குறுதியை நம்பி குடும்ப மாது ஒருவர் 95,180 வெள்ளியை இழந்தார்.
விமான நிறுவனம் ஒன்றில் பணி புரியும் 33 வயதுடைய அந்த பெண்மணியை மாது ஒருவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டு நீதிமன்ற வழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவதாக வாக்குறுதியளித்தார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணை பல முறை தொடர்பு கொண்ட அந்த மாது நீதிமன்ற பிரச்சினையை தீர்க்க தாம் முன்வருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பியை அந்த பெண் இரு வங்கிக் கணக்குகளில் 95,180 வெள்ளியைச் சேர்த்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், வாக்குறுதியளித்தபடி அந்த மாது எந்த முயற்சியும் மேற்கொள்ளாததைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் காஜாங் போலீஸ் நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இத்கைய போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட ஹூசேன், இந்த வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.


