(ஆர்.ராஜா)
கோலாலம்பூர், ஜன. 30- மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வருடாந்திர குடும்ப விழா மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் நேற்று இங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷியாகாரன், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சிலின் சிறப்பு அதிகாரி டத்தோ இ சிவபாலன், கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்பான் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ, ஜெயபக்தி நிறுவன உரிமையாளர் கு.செல்வராஜ், ரத்னவள்ளி அம்மையார் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு சிரமங்களை தனது உரையில் எடுத்துரைத்த டத்தோஸ்ரீ சரவணன், சங்கத்தின் திட்டங்களுக்கு தனது ஆதரவைப் புலப்படுத்திக் கொண்டதோடு சங்க வளர்ச்சிக்கு 5,000 வெள்ளியை நன்கொடையாக வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இந்த குடும்ப தின நிகழ்வின் சிறப்பு அங்கமாக தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர்களை கௌரவிக்கப்பட்டனர். டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்தார்.
சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்கள் மற்றும் நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்களையும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் மறக்கவில்லை. அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழ்வின் உணவுக்கான அனைத்துச் செலவுகளையும் ரத்னவள்ளி அம்மையார் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டதோடு சேலை மற்றும் சுடிதார் அழகு ராணிப் போட்டி மற்றும் சிறார்களுக்கான நடனப் போட்டிகளிலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் இந்த குடும்ப தின விழாவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நாட்டிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தில் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்களைச் சேர்ந்த 170 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்தின் முயற்சியால் தகவல் தொடர்பு அமைச்சின் ‘காசே ஹாவானா‘ அறநிதித் திட்டத்தின் கீழ் பல நலிவுற்ற சங்க உறுப்பினர்கள் உதவிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


