கோத்தா பாரு, ஜன. 30- தாய்லாந்துக்கு பெட்ரோல் கடத்தும் முயற்சியை பொது நடவடிக்கைக் குழுவின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு படைப்பிரிவு வெற்றிகரமாக முறியடித்தது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் இங்குள்ள பாசீர் மாஸ், கம்போங் குபாங் ஜோங்கிலுள்ள கிடங்கில் மினி பெட்ரோல் பம்ப் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
பி.ஜி.ஏ. உறுப்பினர்கள் மேற்கொண்ட இந்த ஓப் தாரிங் டெல்டா 1 சோதனை நடவடிக்கையில் 30 மற்றும் 34 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக தென்கிழக்கு பி.ஜி.ஏ. தென்கிழக்குப் படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹிமிட் கூறினார்.
இந்த சோதனையின் போது அவ்விரு ஆடவர்களும் தோம்புகளில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருந்தனர். அந்த கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான லோரி ஒன்றில் இருந்த மூன்று பெரிய தோம்புகளில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அந்நிறுவனம் பெட்ரோலை ஏல அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கான உரிமையை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிடமிருந்து பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்றார் அவர்.
இந்த நடவடிக்கையில் 11,700 வெள்ளி மதிப்புள்ள 5,700 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஆடவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களோடு மேல் விசாரணைக்காக பாசீர் மாஸ் மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


