மீரி, ஜன. 30- கம்போங் லேரேங் புக்கிட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் பலியான ஃபாத்திமா தாவி (வயது 71) என்ற மூதாட்டியின் உடல் நேற்று மாலை 6.06 மணியளவில் மீட்புப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக மீரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு தெரிவித்தார்.
நேற்று மாலை 6.26 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து அந்த மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டதாக மீட்பு நடவடிக்கையின் கமாண்டருமான அவர் கூறினார்.
அம்மூதாட்டியின் உடல் மேல் நடவடிக்கைக்காக மீரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே லோட் நிலத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்டதில் 12 பேர் பாதிக்கப்பட்டதாக அலெக்ஸ்சன் கூறினார்.
அந்த மூதாட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மீட்புக்குழுவினர் நேற்று காலை 6.17 மணிக்கு 17 வயது இளைஞனின் உடலையும் 10.53 மணிக்கு ஒரு பெண்ணின் உடலையும் கண்டுபிடித்தனர். பின்னர் இரண்டு சிறுமிகளின் உடல்கள் முறையே 11.38 மற்றும் 10.48 மணிக்கு கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் 14 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்ட 7 பேர் உயிர் தப்பினர். கனமழைக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் மற்றும் 85 உறுப்பினர்களை உள்ளடக்கிய மீட்புப் பணியாளர்கள் மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


