ஆர்.ராஜா
ஷா ஆலம், ஜன. 28 - சிலாங்கூரிலுள்ள ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த
தொழிலாளர்களுக்காக பெஸ்தாரி ஜெயாவில் ரெஸிடன்ஸி ராக்யாட்
(பி.ஆர்.ஆர்.) ஹர்மோனி மடாணி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும்
வீடுகளைப் பெறுவதற்கு உரிய ஆதாரங்களை சிலாங்கூர் மாநில
வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்திடம் (எல்.பி.எச்.எஸ்.)
சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்டத் தோட்டத் தொழிலாளர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.
மொத்தம் 245 வீடுகளை உள்ளடக்கிய அந்த வீடமைப்புத் திட்டத்தில் பங்கு
பெறுவதற்கான நிபந்தனைகளை 69 தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே
பூர்த்தி செய்துள்ள நிலையில் எஞ்சிய 176 பேர் வீடுகளைப் பெறும்
வாய்ப்பை இழக்காமலிருக்க அத்தோட்டங்களில் வேலை செய்ததை உறுதி
செய்யும் ஆவணங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று மனித வளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பாராய்டு கூறினார்.
அந்த ஐந்து தோட்டங்களில் வேலை செய்ததற்கான ஆதாரங்களைச்
சமர்பிப்பித்த 69 பேரின் பெயர்களை பெர்ஜெயா சிட்டி நிறுவனம்
எங்களிடம் ஒப்படைத்துள்ளது. எஞ்சிய தொழிலாளர்களின் தகுதியை
ஆராயும் பொறுப்பை நாங்கள் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை
வாரியத்திடம் ஒப்படைத்து விட்டோம். தகுதி உள்ள தோட்டத்
தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் நானும் எனது
அலுவலமும் தலையிடவில்லை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் வழங்கும் ஆதாரங்களை பெர்ஜெயா சிட்டி
நிறுவனமும் எல்.பி.எச்.எஸ். நிர்வாகத்தினரும் பரிசீலித்து தகுதி உள்ள
விண்ணப்பதாரர்களின் பட்டியலை எங்களிடம் வழங்குவர். அதன் பிறகே
நான் அங்கீகாரம் வழங்க முடியும் என அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த திட்டத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் எனக் கூறிய
அவர், வேண்டியவர்களுக்கு தாம் வீடுகளை வழங்கியதாகக் கூறி சிலர்
தம்மீது காவல் துறையில் புகார் செய்துள்ளதாகச் சொன்னார்.
இந்த குற்றச்சாட்டை தாம் வன்மையாக மறுக்கிறேன். அந்த ஐந்து
தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில்
தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாங்கள்
தலையிடவில்லை என்றார் அவர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட அமலாக்கத்தில்
பாப்பாராய்டு அலுவலகம் தலையிடுவதோடு தொழிலாளர்கள் மத்தியில்
பிரிவினையை ஏற்படுத்தவும் முயல்வதாகக் கூறி புக்கிட் தாகார், மேரி
தோட்டம். நைகல் கார்டனர், சுங்கை திங்கி, மின்யாக் தோட்டம்
ஆகியவற்றைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்கள் சிலர் கோல குபு பாரு
போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த வீடமைப்புத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளதாகவும் பாப்பாராய்டு தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்காக பெஸ்தாரி ஜெயாவில் உருவாக்கப்படும்
ரெசிடெண்ஸி ராக்யாட் (பி.ஆர்.ஆர்.) வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப்
பணிகள் இவ்வாண்டு தொடங்கி ஈராண்டுகளில் முற்றுப் பெறும் என
வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா
கடந்தாண்டு இறுதியில் கூறியிருந்தார்.
மொத்தம் 7 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவிலான இந்த வீடமைப்புத்
திட்டத்தை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் வாயிலாக
மத்திய அரசுடன் இணைந்து நிர்மாணிப்பது தொடர்பில் இணக்கம்
காணப்பட்டதாகப் பொர்ஹான் குறிப்பிட்டார்.
பெர்ஜெயா சிட்டி தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வந்த
வீட்டுமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வீடமைப்பு அமைச்சின் 4 கோடி
வெள்ளி ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் 3.5 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில்
வீடமைப்புத் திட்டத்தை உருவாக்க மாநில ஆட்சிக்குழு கடந்த மே மாதம்
10ஆம் தேதி கொள்கையளவில் ஒப்புக் கொண்டது.
பெஸ்தாரி ஜெயா சுற்றுவட்டாரத்திலுள்ள ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த
முன்னாள் தொழிலாளர்களுக்கு 245 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம்
உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்தாண்டு மே மாதம் வெளியிட்ட
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங், இதன்
வழி கடந்த 26 ஆண்டுகளாக அவர்கள் எதிர்நோக்கி வந்த வீட்டுமைப்
பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்றார்.
மொத்தம் 8.09 ஹெக்டர் பரப்பளவிலான இந்த திட்டத்தில் மேரி தோட்டம்,
நைக கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி
தோட்டம் மற்றும் மின்யாக் தோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த
தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.


