(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன. 28 - சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாகப் பெட்டாலிங்
மாவட்டத்தைச் சேர்ந்த 20 இந்திய சிறு வணிகர்களுக்கு வர்த்தக
உபகரணங்கங்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 140,100 வெள்ளி மதிப்பிலான இந்த வர்த்தக உபகரணங்கள்
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான ஐ-சீட் நிதி ஒதுக்கிட்டின் வாயிலாக
வழங்கப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு கூறினார்.
சிலாங்கூரிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை
உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த ஐ-சீட் திட்டத்தின் கீழ் தகுதி
உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வர்த்தக தேவைக்கு ஏற்ப உபகரணங்கள்
வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 400க்கும் மேற்பட்டோர்
பயனடைந்துள்ளதாக க் கூறிய அவர், 2025 வரவு செலவுத் திட்டத்தில்
ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 லட்சம் வெள்ளி நிதியில் இத்திட்டம்
இவ்வாண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
இன்று இங்குள்ள கோஹிஜ்ரா தலைமையகத்தில் நடைபெற்ற பெட்டாலிங்
மாவட்ட நிலையிலான ஐ-சீட் வர்த்தக உபகரண உதவித் திட்டத்திற்கு
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
வழங்கப்பட்ட உபகரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் முறையாகப்
பயன்படுத்தி தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்க் கொள்ளவேண்டும்
என வலியுறுத்திய அவர், இந்த உபகரணங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதால் அவற்றை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தார்.
ஓரிரு இடங்களில் இத்தகைய உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தும்
சம்பவங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய
அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
இப்பொருள்களை விற்க அல்லது பிறருக்கு வாடகைகைக்கு விடக்கூடாது.
ஐ-சீட் பொறுப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
சம்பந்தப்பட்டவர்களின் வர்த்தக இடங்களுக்கு வருகை மேற்கொண்டு
சோதனை செய்வர். தவறாகப் பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டால்
அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார் அவர்.
தகுதி உள்ள தரப்பினர் இந்த உதவித் திட்டத்தின் வழி பயன்பெறுவதை
உறுதி செய்வதற்காக இவ்வாண்டு தொடங்கி ஐ-சீட் திட்டத்திற்கு தகுதி
உள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய சமூகத்
தலைவர்களும் ஈடுபடுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.


