கிள்ளான், ஜன. 28 - கடந்த வாரம் இங்கு அருகிலுள்ள காப்பார் இண்டா தொழிற்பேட்டையில் மறுசுழற்சி செய்யப்பட்ட இரசாயனத்தை பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு அலட்சியம் அல்லது குற்றத் தன்மைக்கான எந்த கூறுகளையும் காவல் துறை கண்டறியவில்லை.
இரசாயன எதிர்வினை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் சுற்றுச்சூழல் துறை மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
இந்த சம்பவம் இரசாயன எதிர்வினையால் ஏற்பட்டது. அலட்சியம் அல்லது குற்றத்தன்மைக்கான கூறு எதுவும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த தொழிற்சாலை உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்
என அவர் சொன்னார்.
மேலும், அந்த தொழிற்சாலையில் தற்போது தூய்மை செய்யும் பணியில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது என்று அவர் இன்று இங்குள்ள தாமான் எங் ஆன் காலை சந்தைக்கு பயணம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, இந்த சம்பவத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் கண் வலி, மூச்சுத் திணறல் போன்ற சிறு பாதிப்புகளுக்கு உள்ளானதாகவும் விஜயராவ் முன்னதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, சுங்கை பூலோ தொழிற்பேட்டையில் உள்ள எல்பிஜி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த ஜனவரி 22ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவத்தில் மூவர் பலியானது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.


