ஷா ஆலம், ஜன. 28 - ஆசியான் அமைப்பின் தலைவர் பதவியை மலேசியா
இவ்வாண்டு ஏற்பதை முன்னிட்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 ஆகிய இடங்களில்
சட்டவிரோத டாக்சி நடத்துநர்களுக்கு எதிரான சோதனை நடவடிக்கையை
சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகா தீவிரப்படுத்தியுள்ளது.
நாட்டின் நுழைவாயில்களில் வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு
செய்லபட்டதாக சந்தேகிக்கப்படும் லைசென்ஸ் இல்லாத அல்லது
சட்டவிரோத டாக்சி சேவை நடத்துநர்கள் 201 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான்
கூறினார்.
நாங்கள் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு
வருகிறோம். இதுவரை நாங்கள் வெற்றிகரமாக சட்டவிரோத
டாக்சியோட்டிகளின் நடவடிக்கைகளை முறியடித்துள்ளோம். இவ்வாண்டு
அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் மேலும் வலுப்படுத்தவிருக்கிறோம்
என்று அவர் சொன்னார்.
சீனப்புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள செக்சன் 17, பஸ் முனையத்தில்
சோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டு சோதனை நடவடிக்கை குறித்து கருத்துரைத்த அஸ்ரின்,
1,701 பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 34 விதி
மீறில்கள் கண்டறியப்பட்டன என்றார். மாநிலம் முழுவதும உள்ள பஸ்
முனையங்கள் மற்றும் டெப்போக்களில் நடத்தப்பட்ட சோதனையில்
பல்வேறு குற்றங்களுக்காக 25 பேருக்கு எதிராகப் குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது ஓட்டுநர் இல்லாதது, வலது தடத்தில் தொடர்ச்சியாகப்
பயணித்தது, கண்ணாடிகளில் விரிசல் காணப்பட்டது. டயர்கள் தேய்ந்த
நிலையில் காணப்பட்டது ஆகியவை இச்சோதனையின் போது
கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும் என்றார் அவர்.


