கோலாலம்பூர், ஜன. 28 - நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை போக்குவரத்து சீராக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்து காரணமாக கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.
விபத்து காரணமாக வலது தடம் மூடப்பட்ட காரணத்தால் இன்று காலை வாகனங்கள் கெந்திங் செம்பாவிலிருந்து புக்கிட் திங்கி வரை மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்
மேலும், விபத்து காரணமாக அவசர பாதை மூடப்பட்டதன் காரணமாக செனாய் உத்தாரா-கூலாய் தடத்தின் 25.1 கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் வாகனங்கள் மெதுவாக நகர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (எல்பிடி) 1, எல்பிடி 2, சுங்கை பீசி டோல் சாவடி மற்றும் கோம்பாக் டோல் சாவடியில் வாகனப் போக்குவரத்து இரு திசைகளிலும் சீராக இருப்பதாகவும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு பிற்பகலில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையில், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் 'ஸ்மார்ட்லேன்' எனப்படும் அவசரத் தடத்தை போக்குவரத்துக்குத் திறக்கும் நடைமுறையும் இன்று செயல்படுத்தப்பட்டது.
தங்காக் முதல் ஜாசின் வரை ( 174 கிமீ - 180.3 கிமீ வடக்கு நோக்கி), ஆயர் குரோவிலிருந்து ஜாசின் ( 174 கிமீ - 180.3 கிமீ வடக்கு செல்லும் தடம் ) மற்றும் சுங்கை முதல் சிலிம் ரிவர் வரை (354 கிமீ - 356 கிமீ தெற்கு தடம்) ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட்லேன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் 1-800-88-0000 என்ற பிளஸ்லைன் கட்டணமில்லா தொலைபேசி, www.twitter.com/plustrafik என்ற ட்விட்டர் பக்கம் அல்லது 1-800-88-7752 என்ற எல்.எல்.எம். லைன் மற்றும் www.twitter com/llminfotrafik என்ற டிவிட்டர் ஆகியவற்றின் மூலம் சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம்.


