ஜோகூர் பாரு, ஜன. 28 - இம்மாதம் 10ஆம் தேதி இங்குள்ள தாமான்
அபாட்டிலுள்ள பேரஙகாடி ஒன்றில் தம்மைக் கடத்த முயற்சி
மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் செய்த
புகார் பொய்யானது என்பது காவல் துறையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள்
அடங்கிய தொழிநுட்ப சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு தாங்கள்
நடத்திய விசாரணையில் இது உறுதிப்படுத்தப்பட்டது என்று ஜோகூர்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
ஆள்நடமாட்டம் எதுவும் அங்கு கண்டறியப்படவில்லை என்பதால்
கடத்தல் சம்பவம் ஏதும் நிகழவில்லை என்பது காவல் துறையின்
விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் நேற்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சீனப்புத்தாண்டை முன்னிட்டு தேயிலை விற்கும் நோக்கில தம்மை
அணுகிய ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் தம்மைக் கடத்த முயன்றதாக
45 வயதுடைய அப்பெண் இம்மாதம் 22ஆம் தேதி போலீசில் புகார்
செய்திருந்தார் என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அப்பெண்ணுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 182வது
பிரிவின் கீழ் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று டத்தோ
குமார் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான செய்தி சமூக ஊடங்களில் பரவலாகப்
பகிரப்பட்டதாகக் கூறிய அவர், இக்குற்றச்சாட்டை நம்பிய
வலைத்தளவாசிகள் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டனர் என்றார்.
அதோடு மட்டுமின்றி இது குறித்து தங்கள் கருத்துகளை வெளியிட்ட சமூக
ஊடக பிரபலங்கள் ஜோகூர் மாநிலத்தில் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் ஏற்படுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர் என்றார் அவர்.
பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் வதந்திகளைப்
பரப்பும் அல்லது செய்திகளைத் திரித்து வெளியிடும் தரப்பினருக்கு எதிராக
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


