கோலாலம்பூர், ஜன. 28 - சீனப்புத்தாண்டை முன்னிட்டு இன்று தொடங்கி
வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வரை தலைநகரில் போக்குவரத்து
மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் 363 போலீசார் ஈடுபடுவர்.
இந்த ஓப் செலாமாட் 23 நடவடிக்கையின் போது வாகனமோட்டிகளின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலைகளில் காவல் துறையினர்
ரோந்துப் பணியில் ஈடுபடும் அதேவேளையில் விபத்து தடுப்பு
நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் என்று கோலாலம்பூர் காவல் துறை
துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் ஆயோப் கூறினார்.
வாகனப் போக்குவரத்து சீராகவும் கட்டுபாட்டிலும் இருப்பதை உறுதி
செய்வதற்காக காவல் துறை உறுப்பினர்கள் அனைத்து இடங்களில்
பணியி ஈடுபடுவர் என அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை
மேற்கொள்ளப்படும் ஓப் லஞ்சார் சோதனை நடவடிக்கையில் விபத்துகள்
அதிகம் நிகழும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து
காணப்படும் பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர்
குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் நெரிசல் மிகுந்த 50 இடங்களும் அதிக விபத்து ஏற்படும் 11
இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில் புத்ரா ஜெயாவில்
நெரிசல் ஏற்படும் எட்டு இடங்களும் விபத்துகள் நிகழும் ஐந்து இடங்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.
நேற்றிரவு புக்கிட் பிந்தாங்கில் சீனப்புத்தாண்டு சாலை பாதுகாப்பு
இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
பொது மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வேளையில்
வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.
மேலும் அனைவரின் பாதுகாப்பையும் கருதி விதிமுறைகளைக்
கடைபிடிக்கவும் சகிப்புத் தன்மையுடன் செயல்படவும் வேண்டும் என்று
அவர் ஆலோசனை கூறினார்.


