புத்ராஜெயா, ஜன. 28 - சபாவில் உள்ள மருத்துவமனையில் இனரீதியான பகடிவதை மற்றும் நச்சு வேலை கலாச்சாரம் நிகழ்வது குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகார்களைத் தாங்கள் பெற்றுள்ளதை சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.
இவ்விவகாரம் விசாரணைக்காக உயர்நெறிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விசாரணைக்கு உதவுவதற்காக MyHelp அமைப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக புகார் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு வடிவிலும் ரூபத்திலும் பகடிவதைகளுக்கு சுகாதார அமைச்சில் இடமில்லை என்று அந்த அறிக்கை கூறியது.
அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான சூழலை உருவாக்கும் நோக்கத்திற்கு முரணான செயல் என்பதால் பகடிவதை விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை தாங்கள் கடைபிடிப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு கூறியது.


