கோலாலம்பூர், ஜன 28 - நாட்டிலுள்ள முன்னாள் விளையாட்டாளர்கள்
கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வெளிநாடுகளில் பயிற்றுநர்களாக
ஈர்க்கப்படுவது குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சர் ஹன்னா இயோ கவலை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டாளர்கள் புதிய
அனுபவத்தைப் பெறும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்வதைச்
சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தீர்வு காணும் விதமாக மலேசியாவிலுள்ள
பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதிய முறை மறுஆய்வு
செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் முன்னாள் நீச்சல் வீராங்கனையான வெண்டி இங் சிங்கப்பூர்
தேசிய நீச்சல் குழுவுக்கு பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.
கூட்டரசு பிரதேச நீச்சல் சங்கத்தின் பயிற்றுநர் வெண்டி பதவியிலிருந்து
விலகியது கவலையளிப்பதாக உள்ளது. வெண்டி மட்டுமின்றி மேலும் பல
ஜிம்னாஸ்டிக் விளையாட்டாளர்களும் சிங்கப்பூருக்கு இடம்
பெயர்ந்துள்ளனர். நாணய பரிமாற்ற மதிப்புடன் ஒப்பிடுகையில்
அவர்களின் ஊதியம் கவர்ச்சிகரமானதாக உள்ளது என்று ஹன்னா
சொன்னார்
அனுபவத்தைப் பெறுவதற்காக விளையாட்டாளர்கள் வெளிநாடுகளுக்குச்
செல்வதை நாம் தடுக்க முடியாது. மலேசியாவில் சம்பள முறை
கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்பதான் முக்கியம். அதே சமயம்
அந்த விளையாட்டாளர்களை நாம் தாயகத்திற்கு கவர்ந்திழுக்க வேண்டும்
என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு, தரம் உயர்த்தப்பட்ட புக்கிட் மெலுரி கூடைப் பந்து திடலின்
ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் உள்நாட்டு விளையாட்டுத்
துறையின் போட்டியிடும் தன்மை குறித்து கேள்வியெழும் சாத்தியம்
உள்ளது என்றும் அவர் சொன்னார்.


