கோலாலம்பூர், ஜன 27 – புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான தேசிய ஹாக்கிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் குழுவும், மகளிர் பிரிவில் நெகிரி செம்பிலான் அணியும் வெற்றி வாகை சூடின.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற சிலாங்கூர் குழுவுக்கு இரண்டாயிரம் ரிங்கிட் ரொக்கத்தோடு சுழற்கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பெற்ற பினாங்கு அணிக்கு ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் கேடயமும் வழங்கப்பட்ட வேளையில் மூன்றாவது இடத்தைப் பெற்ற நெகிரி செம்பிலான் குழுவுக்கு ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தோடு கேடயமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறந்த விளையாட்டு வீரராக பினாங்கு மாநிலத்தின் தானியமித்திரன் வெங்கடேஸ் தேர்வு பெற்ற வேளையில் சிறந்த கோல்காவலராக நெகிரி செம்பிலான் குழுவை சேர்ந்த வைத்திஸ்வரன் இளங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகளிர் பிரிவில் கூடுதல் கோல் அடித்த ஆட்டக்காரராக நெகிரி செம்பிலான் அணியின் சரண்யா சாமிநாதன் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக டனிஷா மோகன் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், சிறந்த கோல்காவலராக ஜோகூர் குழுவவை சேர்ந்த சிவானி பிரபாகரன் தேர்வு பெற்றார்.


