ஷா ஆலம், ஜன. 27 - ஆசியான் அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான தலைவராக மலேசியா பொறுப்பேற்றுள்ள நிலையில் குறிப்பாக தூய்மை மற்றும் உள்கட்டமைப்பு அம்சங்களில் சிறந்த அடையாளத்தை முன்வைக்க சிலாங்கூர் உறுதியாக உள்ளது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்கும் நாட்டின் பிரதான நுழைவாயில் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்திருப்பதால் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானதாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஆகவே, ஊராட்சி மன்றங்கள், பொதுப்பணித் துறை மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அடிப்படை வசதிகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பல்வேறு நிலைகளில் பல கூட்டங்கள் நடைபெற உள்ளன. சிலாங்கூரில் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (வெளிநாட்டு பிரதிநிதிகள்) அடியெடுத்து வைக்கும் முதல் மாநிலம் சிலாங்கூர் ஆகும்.
இல்லாவிடில் அவர்கள் சுபாங் (சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையம், சுபாங்) வழியாக நுழைவார்கள். தவறினால், போர்ட் கிள்ளான் வழியாக வருவார்கள். அவர்களின் முதல் பார்வையில் படுவது நாம்தான் என்று அர்த்தம். ஆகவே, பொது வசதிகள் சுத்தமாகவும் நல்ல நிலையில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.
விருந்தினர்கள் தவிர சுற்றுலாப் பயணிகளும் கூடுதலாக வருமாறு நாங்கள் அழைக்கிறோம். பல்வேறு நாடுகளில் இருந்து கெளரவ விருந்தினர்களாக அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், துறைத் தலைவர்கள் வரவுள்ளனர் என்று அமிருடின் கூறினார்.
ஆசியான் தலைவர் பொறுப்பை மலேசியா 1977, 1997, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் ஏற்றிருந்தது. இந்தப் பொறுப்பை மலேசியா ஐந்தாவது முறையாக ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


