கோலாலம்பூர், ஜன. 27 - ஈராண்டுகளுக்கு முன் இல்லாத நலத் திட்டங்களின் பெயரில் 33 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை மோசடி செய்ததாக ஜோகூர் மாநில நீர் நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சி.இ.ஒ.) மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி ரோஸ்லி அகமது முன் வாசிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும்
சக்கர நாற்காலியில் அமர்நதவாறு நீதிமன்றத்தில் ஆஜரான 39 வயதான முஹமது பைசால் அலியார் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 மற்றும் 4 தேதியிட்ட இரண்டு கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 'புரோகிராம் இமாரா ரமலான் 2023' மற்றும் 'ப்ரோக்ராம் ப்ரிஹாத்தின் கொமுனிட்டி மடாணி 2023" ஆகிய இரண்டு நலத் திட்டங்கள் இருப்பதாக ரன்ஹில் எஸ் ஏ.ஜே. சென். பெர்ஹாட் நிறுவனத்தை ஏமாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் அவர் நன்கொடைகளைக் கோரிய நிலையில் அத்தகைய நிகழ்ச்சிகள் ஒருபோதும் நடைபெறவில்லை என கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த நடவடிக்கைகள் வெ.82,500 மற்றும் வெ.33 லட்சம் தொகையை பெர்த்துபோஹான்
இன்ஸ்பிராசி பிரிஹாத்தின் மலேசியா நிறுவன வங்கிக் கணக்கிற்கு அந்நிறுவனம்
மாற்ற வழிவகுத்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மெனாரா ஃபெல்டா பிளாட்டினம் பார்க்கில் இந்த குற்றங்களை அவர் புரிந்ததாகக் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டது.


