கோலாலம்பூர், ஜன. 27- சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டரசு சாலைகளிலும் வேக வரம்பு நாளை தொடங்கி எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மணிக்கு 90 கிலோமீட்டரிலிருந்து மணிக்கு 80 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும்.
சாலை விபத்து அபாயத்தை குறைக்கும் நோக்கிலான இந்த வேக வரம்பு குறைப்பு "ஓப் செப்பாடு" எனப்படும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது ஆறு நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் முக்கியமற்ற சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதே நேரத்தில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பிற்காக அவசரமாக செய்ய வேண்டிய அவசர பணிகள் நன்கு திட்டமிடப்பட்டி மேற்கொள்ளப்படும்.
தேவைப்பட்டால் வாகனமோட்டிகளின் பயணத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று வழிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், நெடுஞ்சாலையில சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ஜனவரி 23 முதல் பிப்ரவரி 3 வரை செடெனாக்-கூலாய் பகுதியில் சாலை விரிவாக்கப் விரிவாக்கப் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்) ஒப்பந்த நிறுவனத்தை நந்தா கேட்டுக் கொண்டார்
வாகனம் ஓட்டும் போது மிகுந்த சோர்வு மற்றும் தூக்கத்தை தவிர்க்க பயணத்திற்கு முன்பும் பயணத்தின் போதும் போதுமான ஓய்வு எடுப்பது, உடல் நலத்தை கவனித்துக்கொள்வது உட்பட பயணத்திற்கு முன் முழுமையாக தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து சாலைப் பயனீட்டாளர்களையும் அவர் அறிவுறுத்தினார்.


