ஷா ஆலம், ஜன 27- சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக்கேட்டை
ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும்
விடுதலை செய்த செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து
மேல் முறையீடு செய்வதற்கான பரிந்துரையை சிலாங்கூர் மாநில சட்ட
ஆலோசக அலுவலகம் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்துள்ளது.
இவ்விவகாரத்தை உறுதிப்படுத்திய சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், மேல் முறையீடு செய்வது தொடர்பான
முடிவை எடுப்பது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அதிகார
வரம்பிற்கு உட்பட்டது எனக் கூறினார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வது தொடர்பான
பரிந்துரையை சிலாங்கூர் சட்ட ஆலோசக அலுவலகம் அரசுத் தரப்பிடம்
சமர்ப்பித்துள்ளது என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
வழக்கின் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் அதிகாரம் சட்டத்
துறைத் தலைவர் அலுவலகத்திற்கு மட்டுமே உள்ளது என்று சிலாகூர்
சட்ட ஆலோசக அலுவலகம் மாநில அரசிடம் தெரிவித்துள்ளதாக
ஜமாலியா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.
மேல் முறையீடு செய்வது தொடர்பான பரிந்துரையை மட்டுமே சிலாங்கூர்
அரசு வழக்கறிஞர் தரப்பிடம் மாநில சட்ட ஆலோசக அலுவலகம் வழங்க
முடியும். இருப்பினும் இதன் தொடர்பில் முடிவெடுப்பது சட்டத் துறை
தலைவர் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று அவர்
சொன்னார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ரவாங், சுங்கை கோங்கில் அபாயகர
பொருள்கள் அடங்கிய கழிவுகளை வெளியேற்றியதாக கொண்டு வரப்பட்ட
குற்றச்சாட்டிலிருந்து நிறுவனம் ஒன்றின் நான்கு இயக்குநர்கள் மற்றும்
நிர்வாகி ஒருவரை நீதிமன்றம் இம்மாதம் 17ஆம் தேதி விடுதலை செய்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு ரந்தாவ் பாஞ்சாங் ,சுங்கை சிலாங்கூர் 1,2 மற்றும்
3 ஆகிய நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்படும் அளவுக்கு நீரில்
மாசுபாட்டை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


