கோலாலம்பூர், ஜன. 27- புத்ராஜெயாவில் நடத்த திட்டமிட்டிருக்கும் பேரணி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அரசாங்கப் பயணத்துக்கு இடையூறு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு நெல் விவசாயிகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பேரணியை தாம் எதிர்க்கவில்லை என்றாலும் உரிய நேரத்தில், பொருத்தமான சூழ்நிலையில் அதனை நடத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
மேன்மை தங்கிய பேரரசர் மற்றும் எனது அழைப்பின் பேரில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு நாளை மலேசியா வரும் பிரபோவோவை புத்ராஜெயாவில் நாங்கள் சந்திப்போம் என்று அவர் கூறினார்.
விவசாய அமைச்சரிடம் (மற்றும் உணவுப் பாதுகாப்பு) மனுவைச் சமர்ப்பிப்பதற்காக நடத்தப்படும் பேரணியை நான் எதிர்க்கவில்லை. அதனை நீங்கள் தாராளமாகச் செய்யலாம் . ஆனால் இதுபோன்ற விஷயங்களை ஒருமுகப்படுத்தும்போது, தயவுசெய்து பொருத்தமான நேரத்தை உறுதி செய்யுங்கள் என்றார் அவர்.
அடிப்படை நெல் கொள்முதல் விலையை டன்னுக்கு 1,800 வெள்ளியாக ஆக உயர்த்தக் கோரி நாடு முழுவதிலும் இருந்து 1,000க்கும் மேற்பட்ட நெல் விவசாயிகள் நாளை புத்ராஜெயாவில் ஒன்று கூடி பிரதமரிடம் மனுவைச் சமர்ப்பிக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த வருகைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு கூட்டத்தையும் தான் கடுமையாக ஆட்சேபிப்பதாகக் கூறிய அன்வார், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபுவை அணுகுமாறு அத்தரப்பினரை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இந்த பேரணிக்கு மாற்று தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் வலியுறுத்தினார்.
இதன் வழி அதிபர் பிரபோவோவுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் மிகவும் ஆக்ககரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, நெல் விவசாயிகளின் பேரணியை வேறொரு தேதியில் நடத்துவதற்கு காவல்துறை உறுதி பூண்டுள்ளது என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுவைப் பெறுவதற்கு தனது அமைச்சு தயாராக இருப்பதாக முகமது சாபு நேற்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


