ஜெருசலம், ஜன. 17- ஹமாஸ் தரப்பினரால் விடுவிக்கப்பட்ட நான்கு
இஸ்ரேலிய பெண் இராணுவ வீரர்களின் உடல் நிலை மிகவும் நல்ல
நிலையில் உள்ளதோடு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது
அவர்களுக்கு ஊக்க மருந்து அல்லது போதை வஸ்துகள்
வழங்கப்படவில்லை என்பதை இஸ்ரேலிய இராணுவ மருத்துவர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
விடுதலையின் போது மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவதை
போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்த நான்கு பெண்களுக்கும்
வைட்டமின்கள் என்ற பெயரில் ஊக்க மாத்திரைகளும் மனதை
சாந்தப்படுத்தும் மருந்தும் ஹமாஸ் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தன
என்ற இஸ்ரேலின் அதிகாரப்பூர்வக் குற்றச்சாட்டை இந்த மருத்துவ
மதிப்பீடு நிராகரித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவுடன் இந்த பெண்களிடம் நடத்தப்பட்ட
மருத்துவச் சோதனையில் அவர்களின் உடல் நிலை ஆரோக்கியமாகவும்
சீராகவும் உள்ளதாக இராணுவ மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
என்று இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான கான் கூறியது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது தங்களுக்கு ஊக்க
மாத்திரைகள் அல்லது போதை வஸ்துகள் வழங்கப்படவில்லை என்பதை
அந்நால்வரும் உறுதிப்படுத்தினர் என்று அம்மருத்துவர்கள் கூறினர்.
எனினும், தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மிக அருகில்
இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தீவிர குண்டுவீச்சு தாக்குதல்
காரணமாக தாங்கள் கடும் அச்சத்தில் உறைந்து போனதை அவர்கள்
உறுதிப்படுத்தினர்.
இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் காரணமாக தங்கள் கட்டுப்பாட்டில்
இருந்த பல இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உயிரிழந்ததோடு மேலும் பலர் கொல்லப்படும் அபாயத்தையும் எதிர்நோக்கியதாக பாலஸ்தீன போராளிகள் முன்னதாக வெளியிட்ட அறிக்கையுடன் இப்பெண்களின் வாக்குமூலம் ஒத்துப் போகும் வகையில் உள்ளது.


