சுபாங், ஜன. 27- இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ அரசாங்க
வருகை மேற்கொண்டு இன்று காலை மலேசியா வந்தடைந்தார். மேன்மைத தங்கிய பேரரசரின் அழைப்பின் பேரில் அவர் இந்த வருகையை மேற்கொண்டுள்ளார்.
அதிபர் பயணம் செய்த சிறப்பு போயிங் 737-73கியூ விமானம் இன்று
அதிகாலை 5.50 மணியளவில் இங்குள்ள மலேசிய ஆகாயப்படை விமானத்
தளத்தை வந்தடைந்தது.
இந்தோனேசிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய
அதிபர் பிராபோவோ தலைமையிலான பேராளர் குழுவை இயற்கை வளம்
மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது
வரவேற்றார்.
விமான நிலையம் வந்தடைந்த அதிபர் அரச ரேஞ்சர் பட்டாளத்தின் முதல்
படைப்பிரிவின் (சடங்குப்பூர்வ) கேப்டன் முகமது ஷாபிக் நஜ்மி மஸ்லான்
தலைமையிலான 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய
குழுவினரின் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
இந்தோனேசிய அதிபரின் அரசாங்க வருகை மலேசியாவுக்கும்
அந்நாட்டிற்கும் இடையிலான அணுக்கமான மற்றும் சிறப்பு வாய்ந்த
நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று விஸ்மா புத்ரா
கூறியது.
இந்த வருகையின் ஒரு பகுதியாக அதிபர் பிராபோவோ மேன்மை தங்கிய
பேரரசர் சுல்தான் இப்ராஹிமை இஸ்தான நெகாராவில் சந்திப்பார். பின்னர்
அதிபர் மற்றும் அவரது பேராளர் குழுவுக்கு மாமன்னர் அரசாங்க விருந்து
வழங்குவார்.
இன்று பிற்பகல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் அதிபர்
சந்திப்பு நடத்துவார். பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தில் நடைபெறும்
இச்சந்திப்பில் பரஸ்பர நலன்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்பு உறவுகள் மற்றும் வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பர்.


