கோலாலம்பூர், ஜன. 27- கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (கெஅடிலான்)
மத்திய தலைமைத்துவ மன்றம் (எம்.பி.பி.), மத்திய மகளிர் தலைமைத்துவ
மன்றம் (எம்.பி.டபள்யு.பி.) மற்றும் மத்திய இளைஞர் தலைமைத்துவ
மன்றம் ( எம்.பி.ஏ.எம்.கே.பி.) ஆகிய பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே
மாதம் 24ஆம் தேதி நடைபெறும்.
தொகுதி நிலையிலான பதவிகளுக்கும் தொகுதி மகளிர் மற்றும் தொகுதி
இளைஞர் பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 11 முதல் 20 வரை
நடைபெறும் என்று கெஅடிலான் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர்
ஃபுஸியா சாலே கூறினார்.
2025-2028 தவணைக்கான மத்திய மற்றும் தொகுதி தேர்தல் தொடர்பில்
மத்திய தேர்தல் செயல்குழு முன்வைத்த பரிந்துரைகளைப் பரிசீலித்தப்
பின்னர் மத்திய தலைமைத்துவ மன்றம் இந்த தேதிகளை நிர்ணயம்
செய்ததாக அவர் சொன்னார்.
தற்போது நடைபெற்று வரும் கெஅடிலான் உறுப்பினர் பட்டியலை
சீர்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய தலைமைத்துவ
மன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது. இது தவிர, உறுப்பிய அந்தஸ்தை
சரிபார்த்தல் 2025 தேர்தலில் வாக்களிப்பதற்கான பதிவு மற்றும்
கெஅடிலான் கட்சியின் தலைமைச் செயலாளர் அலுவலகம் பிப்ரவரி 1
முதல் மார்ச் 16 வரை மேற்கொள்ளவிருக்கும் உறுப்பினர் கட்டண
வசூலிப்பு குறித்தும் தலைமைத்து மன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது என்றார்
அவர்.
தொகுதி நிலையிலான செயலவை உறுப்பினர், மகளிர் மற்றும் இளைஞர்
பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் மாதம் 14 முதல் 16 ஆம்
தேதி வரை நடைபெறும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அதே சமயம் , மத்திய தலைமைத்துவ மன்றம், மத்திய மகளிர் மற்றும்
மத்திய இளைஞர் பகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் மே 3 முதல் மே 5
வரை நடைபெறும் என அவர் சொன்னார்.


