சிரம்பான், ஜன. 27- இங்குள்ள தாமான் பிஞ்சாய், ஜாலான் பிஞ்சாய் 3இல்
உள்ள வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 14
உள்நாட்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நள்ளிரவு 12.01 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 34
முதல் 62 வயது வரையிலான அச்சந்தேகப் பேர்வழிகள் அனைவரும்
கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
இந்த சோதனையின் போது மேசை மீது வைக்கப்பட்டிருந்த ஹோலோ
சூதாட்ட வரைபடங்கள், இரு பகடைக்காய்கள், பீங்கான், தட்டு, பீங்கான்
கிண்ணம் மற்றும் 19,168 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல்
செய்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 1953ஆம் ஆண்டு திறந்த வெளி சூதாட்ட மையச்
சட்டத்தின் 6(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக்
கூறிய அவர், கைதான அனைவரும் நேற்று தொடங்கி மூன்று
நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


