சண்டகான், ஜன. 27- பதினேழு சீன நாட்டு சுற்றுப்பயணிகள் பயணித்த
சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
ஜாலான் லிந்தாஸ் சிபுகாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் எதிரே நேற்று
நிகழ்ந்த இந்த விபத்தில் ஆறு பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட
வேளையில் அதன் ஓட்டுனர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.
இந்த விபத்தில் காயங்களுக்குள்ளான 63 வயது பேருந்து ஓட்டுநர் மற்றும்
ஆறு பயணிகளை தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்னரே பொது
மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாக சண்டகான்
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் செவரினியஸ்
சைன்குய் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் நேற்று காலை 9.15 மணியளவில் தாங்கள்
அவசர அழைப்பைப் பெற்றதாகவும் எண்மர் கொண்ட தீயணைப்புக்
குழுவினர் தீயணைப்பு நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர்
தொலைவிலுள் சம்பவ இடத்திற்கு விரைந்தாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த பேருந்தில் நான்கு சிறார்கள் உள்பட
பத்து பெண்களும் ஏழு ஆண்களும் பயணம் செய்தனர் என்று அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த விபத்தின் எதிரொலியாக சம்பவ இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க்
கசிவை தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வண்டியிலிருந்த நீரைப்
பயன்படுத்தி சுத்தம் செய்தனர். காலை 10.42 மணியளவில் இந்த துப்புரவுப்
பணி முற்றுப் பெற்றது என்றார் அவர்.


