கோலாலம்பூர், ஜன. 26 - இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அடுத்த வாரம் மேற்கொள்ளவிருக்கும் முதலாவது பணிநிமித்த அரசுப் பயணம், இந்தோனேசியா-மலேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஆசியானின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதற்குமான ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது என்று மலேசியாவுக்கான இந்தோனேசியாவின் தூதர் டத்தோ ஹெர்மோனோ கூறினார்.
ஆசியான் பிராந்தியத்தில் உள்ள இரண்டு வலுவான நாடுகளான இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு இப்பயணம் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பயணம் எல்லை விவகாரம் உட்பட நிலுவையில் உள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது என பெர்னாமாவை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார் .
ஆசியான் குறித்து கருத்து தெரிவித்த ஹெர்மோனோ, அரசியல் இயக்கவியலை வழிநடத்தவும் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் ஆசியான் மையத்தை பராமரிப்பதே இன்று அமைப்பு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக உள்ளது என்றார்.
இந்தப் பின்னணியில் இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, ஆசியான் மையத்தை நிலைநிறுத்துவதில் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரபோவோ, மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் அடுத்ததாக தாம் மலேசியாவிற்குச் செல்லவிருப்பதாக கடந்த வியாழக்கிழமை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.
நமது நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது எப்போதும் ஒரு வலுவான மற்றும் வளமான பிராந்தியத்தை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் முயற்சிகளில் முதன்மையான முன்னுரிமையாகும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராக தனது பதவிக் காலத்தை தொடங்கிய பிரபோவோவின் மலேசியாவுக்கான அரசு முறைப் பயணத்தின் போது பல அமைச்சர்களுடன் உடன் வருவார்கள் என்று ஹெர்மோனோ மேலும் கூறினார்.
அவர்களில் வெளியுறவு அமைச்சர் சுகியோனோ, வர்த்தக அமைச்சர் புடி சந்தோசோ, புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் காதிர் கார்டிங், முதலீடு மற்றும் கீழ்நிலைக் கல்வி அமைச்சர் ரோசன் பெர்காசா ரோஸ்லானி, அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பேராசிரியர் அப்துல் மு'தி, மற்றும் அமைச்சரவைச்செயலர் மேஜர் டெடி இந்திர விஜயா ஆகியோர் அடங்குவர்.
மலேசியா ஐந்தாவது முறையாக ஆசியான் தலைவர் பதவியை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 'உள்ளடங்கிய தன்மை மற்றும் நிலைத்தன்மை' என்ற கருப்பொருளுடன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. முன்னதாக, மலேசியா 1977, 1997, 2005 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஆசியான் தலைவர் பதவியை வகித்தது.


