ANTARABANGSA

போர்  நிறுத்தம்- நான்கு இஸ்ரேலிய  பெண் இராணுவ வீரர்கள் விடுவிப்பு

26 ஜனவரி 2025, 5:39 AM
போர்  நிறுத்தம்- நான்கு இஸ்ரேலிய  பெண் இராணுவ வீரர்கள் விடுவிப்பு

காஸா சிட்டி, ஜன 26- இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீனத்தின்  ஹமாஸ்  அமைப்பு நான்கு  இஸ்ரேலிய பெண் வீரர்களை சனிக்கிழமை ஒப்படைத்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ சீருடை அணிந்த அந்த நான்கு வீரர்களும்   காஸா நகரில் உள்ள பாலஸ்தீன சதுக்கத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட போது அவர்கள் நால்வரும் மேடையில் சிரித்தவாறு  கையசைத்தனர்.

விடுவிக்கப்பட்ட  அந்த நால்வரும்  இஸ்ரேலுக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் காஸாவில் உள்ள தனது படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியது.

ஒப்படைப்பு நடைமுறையின் போது   செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள முன் ஆவணங்களில் கையெழுத்திட அந்த நால்வரும் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நான்கு இஸ்ரேலிய வீராங்கனைகளும் ஒப்படைக்கப்படும்  நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பாலஸ்தீன சதுக்கத்தில்  திரண்டனர்.

நான்கு இஸ்ரேலிய வீரர்களுக்கு ஈடாக மொத்தம் 200 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி  தொடங்கிய போரில்  கிட்டத்தட்ட 47,300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில்  பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர். இப்போரில் மேலும்  111,400 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்தும் வகையில்  ஆறு வார காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வந்தது.

மூன்று கட்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் தொடர்ச்சியான அமைதி ஆகியவையும் அடங்கும். நிரந்தர போர்நிறுத்தத்தை உறுதி செய்வது மற்றும் காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறுவது ஆகியவை இந்த உடன்படிக்கையின் குறிக்கோளாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.