கோலாலம்பூர், ஜன. 26- சீனப்புத்தாண்டை முன்னிட்டு கோலாலம்பூர் சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் 1,106 வாகனங்கள் சோதனையிடப்பட்ட வேளையில் அவற்றில் 124 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச்சோதனையின் போது கண்டறியப்பட்ட குற்றங்களில் வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதது மிக அதிகமாக உள்ளதாக கோலாலம்பூர் சாலை போக்குவரத்து இலாகா இயக்குநர் ஹமிடி அட்னாம் கூறினார்.
வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாத குற்றத்திற்காக 103 வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சாலை வரி இல்லாதது (70) காப்புறுதி இல்லாதது (58), எண் பட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிராதது (18) பக்கவாட்டு கண்ணாடி இல்லாதது (1) ஆகிய குற்றங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன என்று அவர் சொன்னார்.
தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் இரவு 8.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை நடத்தப்பட்ட இச்சோதனையில் 235 குற்ற அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. இது தவிர, போலி எண் பட்டையைப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக ஒரு காரும் பல்வேறு குற்றங்களுக்காக எட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இத்தகைய பாதுகாப்பு இயக்கங்கள் வாயிலாக பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த சோதனையில் அரச மலேசிய போலீஸ் படை, குடிநுழைவுத் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் உள்ளிட்ட அமலாக்கத் அமைப்புகளின் 73 பணியாளர்களும் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது, லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஒரு பாகிஸ்தானியர், மூன்று இந்தோனேசியர்கள், நான்கு வங்காளதேசிகள் உள்பட எட்டு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


