தானா மேரா, ஜன. 26 இவ்வாண்டு - ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட 150 வெள்ளி சமவிகித அபராதத் தொகை விதிப்பு திட்டத்தின் மூலம் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) நிலுவையில் உள்ள குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையாக 1 கோடியே 25 லட்சம் வெள்ளியை வசூலித்துள்ளது.
இந்த சிறப்பு அபராதச் சலுகை மூன்று வகையான குற்றங்களுக்கு
அதாவது தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (அவாஸ் - சம்மன்ஸ் 53 ஏ), விசாரணை அறிவிப்பு (114), மற்றும் சம்மன் அறிவிப்பு (115/ஜே.பி.ஜே (பி) 23) பொருந்தும் என்று ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாட்லி ராம்லி கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி 23ஆம் தேதி நிலவரப்படி, 83,000 சம்மன்களுக்கு தீர்வு காணப்பட்டதன் மூலம் 1 கோடியே 25 லட்சம் வெள்ளியை வசூலித்துள்ளோம். மேலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என அவர் சொன்னார்.
இந்த சிறப்பு அபராதச் சலுகை ஜூன் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும். 300 வெள்ளி அசல் அபராதத் தொகையுடன் ஒப்பிடும்போது ஆவாஸ் சம்மன்கள் 150 வெள்ளியில் தீர்க்கப்பட அனுமதிக்கிறது என்று அவர் நேற்று இங்கு கூறினார்.
ஜூலை 1 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள சம்மன்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் பரிவர்த்தனை கட்டுப்பாடு மற்றும் கருப்பு பட்டியல் உள்ளிட்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
நிலுவையில் உள்ள சம்மன்களுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறிய நபர்கள் அதனைச் செலுத்தும் வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியை புதுப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நாம் தற்போது சலுகைக் காலத்தில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஜூன் 30 வரை சிறப்பு அபராதச் சலுகைத் திட்டத்தின் கீழ் தங்கள் நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம்.
இந்த சிறப்பு அபராதத் தொகையை ஜே.பி.ஜே. முகப்பிடங்கள், ஜே.பி.ஜே. அகப்பக்கம் மற்றும் my JPJ செயலி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் செலுத்தலாம் என்று அவர் கூறினார்


