மாரான், ஜன 24, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் அவசர பாதையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது, 6 பேரை ஏற்றிச் சென்ற MPV வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்; ஐவர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து இன்று அதிகாலை 1.50 மணிக்கு பஹாங், மாரான் R&R-ரில் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது, கோலாலம்பூரிலிருந்து குவாந்தானுக்குச் சென்றுகொண்டிருந்த 35 வயது லாரி ஓட்டுநர், டயரை மாற்றுவதற்காக அவசரப் பாதையில் அதனை நிறுத்தியுள்ளார்.
அப்போது, 5 குடும்ப உறுப்பினர்களை ஏற்றிக் கொண்டு கோலாலம்பூரிலிருந்து திரங்கானுவுக்கு, 41 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற MPV வாகனம், அவசரப் பாதையில் நின்றிருந்த லாரியின் பின்புற வலது பக்கத்தை மோதியது.
அதில், முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுநரின் 12 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
MPV ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் 1 முதல் 10 வயது வரையிலான அவர்களின் 4 குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.
மேல் சிகிச்சைக்காக தெமர்லோ, சுல்தான் அஹ்மட் ஷா மருத்துவமனைக்கு ஐவரும் கொண்டுச் செல்லப்பட்டதாக, மாரான் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டண்ட் வோங் கிம் வாய் (Wong Kim Wai) தெரிவித்தார்
35 வயது லாரி ஓட்டுநருக்கு காயமேதும் ஏற்படவில்லை.
அவசரப் பாதையில் நின்ற பிறகு, மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை வழங்கும் பொருட்டு லாரி ஓட்டுநர் வாகனத்தின் பின்னால் ஒரு கூம்பை வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கவனக்குறைவாக வாகனமோட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.


