சிப்பாங், ஜன. 24 - மலேசியாவின் ஆசியான் தலைவர் பதவிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (கே.எல் ஐ.ஏ.) ஏரோட்ரெய்ன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மீண்டும் தொடங்கும்.
இந்த அமைப்பு அனைத்து அம்சங்களிலும் தடையின்றி இயங்குவதையும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் உறுதிசெய்ய பல தொழில்நுட்பங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் டத்தோ முகமது இசானி கானி கூறினார்.
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து சோதனைகளையும் முடிக்க வேண்டும். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக இருந்தால் உடனடியாக செயல்படுவதற்கான சான்றிதழைப் பெறலாம்.
நாங்கள் பின்பற்றுவதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இரண்டாம் காலாண்டு வரையிலான கால அவகாசம் முக்கியமானது. எனவே அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். அப்போதுதான் விரைவில் செயல்பட முடியும் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 1998 இல் செயல்படத் தொடங்கியதிலிருந்து கே.எல் ஐ.ஏ.வின் உள் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக விளங்கிய ஏரோட்ரெய்ன், பழுது காரணமாக கடந்த 2023 மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
புதிய ஏரோட்ரெய்ன் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரத்தை பூர்த்தி செய்யும் உயர்மட்ட சேவைகளை வழங்குகிறது என்று இசானி கூறினார்.
அதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். ஏனென்றால் நாங்கள் பணம் செலுத்துகிறோம். மேலும் அனைத்து பயனீட்டாளர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.


