கோலாலம்பூர், ஜன. 24 - இவ்வாண்டு ஆசியான் தலைவர் பதவியை
மலேசியா ஏற்றுள்ள நிலையில் இதன் தொடர்பில் நடைபெறும்
கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை
உறுதி செய்ய கோலாலம்பூர் காவல் துறை அயராது பாடுபட்டு
வருவதோடு 9,000 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களையும் தயார்
நிலையில் வைத்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல், மே மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில்
கோலாலம்பூர் காவல் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில்
186 கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர்
போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.
அந்த கூட்டங்களில் 21 புத்ராஜெயாவில் நடைபெறும் என்று கோலாலம்பூர்
போலீஸ் தலைமையகத்தின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வுக்கு
தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் குறிப்பாக வருகையாளர்கள் மற்றும் வெளிநாடு பேராளர்கள்
மத்தியில் அச்சம் ஏற்படாத வகையில் மாநகர் பாதுகாப்பாக உள்ளதை
உறுதி செய்வது கோலாலம்பூர் போலீஸ் துறையின் கடமையாகும் என
அவர் சொன்னார்.
கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களும் நிகழ்வுகளும்
சிறப்பாக நடைபெறுவதையும் சீரான போக்குவரத்து மற்றும்
பேராளர்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம் என்றார் அவர்.
பொது ஓழுங்கைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக கோலாலம்பூரில் உள்ள
காவல் துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்
என்பதோடு அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசப்
போக்கை கடைபிடிக்கக்கூடாது. முறையான தயார் நிலையும் சிறப்பான
பணி நிறைவேற்றமும் மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மலேசியா இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி ஆசியான்
அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றுள்ளது. கடந்த 1977,1997, 2005 மற்றும்
2015க்குப் பிறகு அந்த உயரிய பொறுப்பை இவ்வாண்டு மலேசியா
ஏற்கிறது.


