ஷா ஆலம், ஜன. 24 - அடுத்தாண்டு ஆகஸ்டு மாதம் நடைபெறவிருக்கும்
22வது மலேசியா விளையாட்டுப் போட்டிக்கான (சுக்மா) ஏற்பாட்டு
மையமாக சிப்பாங் பெட்ரோனாஸ் அனைத்துலக பந்தயத் தடத்தை
(பெட்ரோனாஸ் எஸ்.சி.சி.) பயன்படுத்துவதற்கான சாத்தியம்
பரிசீலிக்கப்படுவது குறித்து அதன் நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
சுக்மா போட்டியின் தொடக்க மற்றும் இறுதி நிகழ்வுகளை இந்த தடத்தில்
நடத்துவது குறித்து தாங்கள் மாநில அரசு மற்றும் சுக்மா செயலகத்துடன்
பேச்சு நடத்தி வருவதாகப் பெட்ரோனாஸ் எஸ்.ஐ.சி. தலைமைச்
செயல்முறை அதிகாரி அஸான் ஷாரிமான் ஹனிப் கூறினார்.
பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கான தனித்துவமிக்க அனுகூலங்களை
இந்த பந்தயத் தடம் கொண்டுள்ளது. இந்த தொலைநோக்குத் திட்டத்தை
நனவாக்குவதில் நாங்கள் சுக்மா செயலகத்துடன் இணைந்து செயல்பட்டு
வருகிறோம் என்று அவர் சொன்னார்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சுக்மா போட்டியின் தொடக்க
மற்றும் முடிவு விழாக்களை இந்த பந்தயத் தடத்தில் நடத்துவது குறித்து
சுக்மா 2026 நிர்வாக க் குழு பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
அதே சமயம் பாரா சுக்மா எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் நடைபெறும் என்று அவர்
தெரிவித்தார்.
இந்த நிகழ்வு தொடர்பான திட்டமிடல் மற்றும் அமலாக்கம் சீராக
நடைபெறுவதை உறுதி செய்ய தாங்கள் மாநிலச் செயலகத்துடன்
தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக அஸான் குறிப்பிட்டார்.
இந்த முன்னெடுப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் பாரம்பரியமாக
அரங்கில் நடைபெறும் தொடக்க மற்றும் இறுதி நிகழ்வுகளிலிருந்து இது
முற்றிலும் மாறுபட்டதாக விளங்கும் என்று அவர் சொன்னார்.


