பத்தாங் காலி, ஜன. 24 - அரசாங்க ஊழியர்கள் நில உரிமையை
சட்டவிரோதமான முறையில் மாற்றும் செயல்களைத் தடுப்பதற்காக நிலம்
சம்பந்தப்பட்ட நிர்வாக முறையை மாநில அரசு கடுமையாக்கவுள்ளது.
மாநிலத்தில் இத்தகைய மோசடி அம்பலமானது மற்றும் இதன் தொடர்பில்
அரசு ஊழியர்கள் உள்பட பலர் கைதானது ஒரு தொடக்கமே என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வர்ணித்தார்.
மிகவும் பாதுகாப்பான மின்-நில நிர்வாக முறை அமலாக்கம்
செய்யப்படுவதற்கு முன் நில நிர்வாகத்தில் நிகழ்ந்த மோசடிகள்
காரணமாக பல ஆண்டுகளில் பெரும் இழப்பை மாநில அரசு அடைய
நேர்ந்ததாக அவர் சொன்னார்.
நில மோசடி குறிப்பாக இரட்டை நில உரிமை கோரிக்கை காரணமாக
மாநில அரசு பெரும் தொகையை இழக்க நேரிட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று நிலங்களை வழங்கும் அதேவேளையில்
இழப்பீட்டையும வழங்க வேண்டி வந்தது என்று அவர் சொன்னார்.
இத்தகைய நிலங்களில் ஒரு பகுதி வர்த்தகம் சம்பந்தப்பட்டவையாகும்.
இந்த விஷயத்தை நாம் விரைந்து கையாள வேண்டும். இது வெறும்
தொடக்கம்தான். தரம் உயர்த்துவதற்கான வழிவகைகளை நாம் ஆராய
வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மின்-நில நிர்வாக முறைக்கு மாறும் கட்டத்தில் சில தரப்பினர்
சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி உரிமை
இல்லாதவர்கள் பெயர் இடம் பெறும் வகையில் பதிவுகளில மோசடி
செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது மின்-நில நிர்வாக முறை கடுமையான கட்டுப்பாடுகளைக்
கொண்டுள்ளது என கூறிய அவர், இந்த மோசடி தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையமும் காவல்துறையும் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நில உரிமை மாற்றம் தொடர்பில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் 17 பேர்
விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் முன்னதாக
செய்தி வெளியிட்டிருந்தன.


