கோத்தா கினபாலு, ஜன. 23 - இங்குள்ள பெத்தாகாசில் உள்ள கட்டிடத்தின்
நான்காவது மாடியில் ஏற்பட்டத் தீயை அணைக்கும் பணியின் போது இரு
தீயணைப்பு வீரர்கள் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாயினர்.
அவர்களில் ஒருவரான 34 வயது அம்ரான் அமிர் சிகிச்சைக்காக குயின்
எலிசெபெத் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவரின் உடல்
நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாம் நிலை தீயணைப்பு உயர்
அதிகாரி ஷாரிப் ஃபைசுலுக்கு (வயது 38) சம்பவ இடத்திலேயே சிகிச்சை
வழங்கப்பட்டதாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கை மையம் கூறியது.
இந்த தீவிபத்து தொடர்பில் இரவு 11.59 மணியளவில் தீயணைப்புத் துறை
தகவலைப் பெற்ற வேளையில் தீயை அணைக்கும் பணி வியற்காலை 1.40
மணிக்கு முற்றுப் பெற்றது என்று அம்மையம் வெளியிட்ட அறிக்கை
ஒன்று தெரிவித்தது.
தீயை அணைக்கும் பணியில் கோத்தா கினபாலு மற்றும் பெனாங்பாங்
தீயணைப்பு நிலையங்களிலிருந்து 38 உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.


