புக்கிட் மெர்தாஜம், ஜன. 23 - பயணிகள் வேடத்தில் விரைவு பேருந்துகளில்
பயணிக்கும் சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அமலாக்க
அதிகாரிகளின் செயல் பேருந்து ஓட்டுநர்கள் கவனமுடன் வாகனத்தைச்
செலுத்துவதை உறுதி செய்வதில் பெரிதும் துணை புரிகிறது.
தாங்கள் கவனிக்கப்படுவதை பேருந்து ஓட்டுநர்கள் உணரும் காரணத்தால்
அவர்கள் கவனமுடன் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதோடு
குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உடனடியாகவும் நடவடிக்கை
எடுக்கப்படுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது என்று பினாங்கு
மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் ஜூல்கிப்ளி இஸ்மாயில் கூறினார்.
பயணிகள் வேடத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையின்
போது வாகனமோட்டும் லைசென்ஸ், பி.எஸ்.வி. லைசென்ஸ் மற்றும்
பேருந்தை செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்துவது போன்ற
குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
இவை தவிர, வாகனமோட்டும் போது புகைபிடிப்பது, இரட்டைக்
கோடுகளில் முந்திச் செல்வது உள்ளிட்ட குற்றங்களும்
கண்காணிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள ஜூரு டோல் சாவடியில் 2025 சீனப் புத்தாண்டு சிறப்பு
சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மேலும், பேருந்துகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக
மாநிலத்திலுள்ள இரு முக்கிய பேருந்து முனையங்களான பினாங்கு
சென்ட்ரல் மற்றும் சுங்கை நிபோங் முனையங்களில் சோதனை
மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.
வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இந்த சாலை
பாதுகாப்பு இயக்கத்தின் போது சாலை போக்குவரத்து இலாகாவின் 220
அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுவர் என அவர்
தெரிவித்தார்.


